ரூ.8 லட்சம் கோடி சரிவை கண்ட அதானியின் ராஜ்ஜியம் - மீண்டு வருவது சாத்தியமா?
இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானி, தனது ஃஎப்.பி.ஓ(FPO) பங்கு விற்பனையை நிறுத்தியதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க முயன்றார்.
Updated: Feb 3, 2023, 14:09 IST
இந்த விற்பனை மூலம் திரட்டப்பட்ட 2,000 கோடி ரூபாயை(2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தருவதாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிவித்தது. இந்த முடிவு ",தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை" பாதிக்காது என்று அதானி தெரிவித்திருந்தார்
அமெரிக்க பங்குச் சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டை அதானி மறுத்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 8.8 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதானி அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 3.9 லட்சம் கோடி) இழந்து, இப்போது ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் 22வது இடத்தில் உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பட்டியலில் 3வது இடத்திலும் நேற்று 16வது இடத்திலும் கௌதம் அதானி இருந்தார்.